கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் சிறுவர்கள் முன்னால் ஆசிரியர்கள், ஆசிரியைகள் சினிமாப் பாட்டிற்கு நடனமாடிய காட்சியானது பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் என்னை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. எமது சிறார்களின் எதிர்காலத்தை வளர்க்க வேண்டியவர்கள் இவ்வாறு குத்தாட்டம் போடுவது பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா? என்பதைத் தங்களிடமிருந்து அறிய விரும்புகின்றேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் என்.பற்றிக் டிறஞ்சனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் நிகழ்வு தொடர்பாக.... எனும் தலைப்பிட்டுத் தனது கையொப்பத்துடன் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற முறையிலும், கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சியில் பல வகையிலும் பங்கெடுத்தவன் என்ற வகையிலும் மேற்படி விடயம் தொடர்பாகத் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஆசிரியர் தின நிகழ்வுகள் தொடர்பான காணொளிக் காட்சி பல ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றது.
இக் காணொளியினை ekokkuvil என்ற முகநூல் இணைப்பில் பார்வையிடலாம்.
ஆசிரியர் தின விழா என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றும் சேவையினை நினைவுகூர்ந்து அவர்களைக் கெளரவிக்கும் ஒரு தினமாகும். ஆனால், கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் சிறுவர்கள் முன்னால் ஆசிரியர்கள், ஆசிரியைகள் சினிமாப் பாட்டிற்கு நடனமாடிய காட்சியானது பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் என்னை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது.
இதனை ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்களுடைய சொந்த விடயமாகக் கருதுவதாகவிருந்தால் அவர்கள் யாருடனும் பாடசாலைக்கு வெளியில் குத்தாட்டம் போடலாம். பாடசாலைக்குள் இவ்வாறான நிகழ்வுகளை நடக்கவிட்டு நாம் கட்டிக் காத்த பாடசாலையினைக் கீழ்நிலைக்கு இட்டுச் செல்லாது பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் வண்ணம் தங்களை வேண்டிக் கொள்கின்றேன் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.