விரைந்து செயற்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு ஜெயசேகரன் கடிதம்!

 


தற்போது தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குச் செவி சாய்க்காது, அவற்றைத் தாங்கள் கருத்திற் கொள்ளாது தமிழ்மக்களின் விடிவிற்காக, அவர்களுடைய நீண்டகால உரிமைப்  போராட்டத்திற்குத் தீர்வினைப் பெற நீங்கள் விரைந்து செயற்பட வேண்டுமெனத் தமிழ்மக்கள் விரும்புகிறார்கள். தேவையற்ற விமர்சனங்களுக்கு அப்பால் தற்போதுள்ள தலைவர்களுள் தமிழ்மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த தலைவர் என்ற ரீதியில் தமிழ்மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தரும் கடமையும், பொறுப்பும் தங்களுக்கு உள்ளது என்பதைத் தங்கள் கவனத்திலெடுத்துச் செயற்படுவீர்களென எதிர்பார்க்கிறோம். தமிழ்மக்கள் என்றும் தங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள் என்பதைத் தெரியப்படுத்துகின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மின் அஞ்சலிலும், பதிவுத் தபாலிலும் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,                

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஜயா அவர்கட்கு,

தமிழ்மக்களின் மூத்த தலைவராகிய தங்களுக்கு உரிமையோடும், பணிவோடும் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இலங்கை அரசு இந்த நாட்டைச் சிங்கள-

பௌத்த நாடாகச் சித்தரித்து அதற்கான  முழு வேலைத் திட்டத்தையும் சுதந்திரத்திற்குப் பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகின்றது.

தமிழ்மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட கால நீண்ட எமது போராட்டம் இன்னும் வெற்றி பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர் தம் பெரும்பான்மையை இழந்துள்ளனர். வடக்கு விரைவாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. 

வரலாறும், பாடப் புத்தக ரீதியாகவும், தொல்பொருள் ரீதியிலும தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றது. அரச தலைவர்கள் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு மறுபுறம் வடக்கு- கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்றவற்றினூடாகத் தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்களைச் சூறையாடுவதும், கோயில்களை அழித்துப் புத்தபெருமானை பிரதிஷ்டை செய்வதும், தமிழ்மக்களுக்கான வேலைவாய்ப்புக்களைப் புறக்கணிப்பதும் தொடர்ந்தும் அன்றாட நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இப்படியாகத் தமிழ்மக்கள் பல முனைகளில் தாக்கப்பட்டு வருகிறார்கள்.  

இந்தியா உட்பட ஜனநாயக நாடுகளெனத் தம்மை அடையாளப்படுத்தும் நாடுகள் தமிழர்களையும், தமிழர் தாயகத்தையும், அவர்களுடைய மனித உரிமைகளையும் பாதுகாக்கவும், நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை. இன்னும் சிறிது காலத்தில் வடக்கு- கிழக்கில் தமிழர்கள் தங்கள் தாயகத்தை விரைவாக இழந்து விடுவார்கள். இவை எல்லாம் தாங்கள் அறியாத விடயம் அல்ல.

உடல் ரீதியாக நாங்கள் பலவீனப்பட்டிருந்தாலும் சிந்தனை மற்றும் அறிவுபூர்வமான செயற்பாடுகளில் நீங்கள் இன்னும் ஆற்றல் நிறைந்தவராகவே இருக்கின்றீர்கள் என நாம் நம்புகின்றோம். அந்தவகையில் இந்திய அமெரிக்கா உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள், தமிழர் தரப்புப் பிரச்சினைகள தொடர்பாகத் தங்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்கள்.

தற்போது தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குச் செவி சாய்க்காது, அவற்றைத் தாங்கள் கருத்திற் கொள்ளாது தமிழ்மக்களின் விடிவிற்காக, அவர்களுடைய நீண்டகால உரிமைப் போராட்டத்திற்குத் தீர்வினைப் பெற நீங்கள் விரைந்து செயற்பட வேண்டுமெனத் தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.

மறைந்த எமது தலைவர்களான தந்தை செல்வா, தலைவர் அமிர்தலிங்கம், தலைவர் சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் தாங்கள் இணைந்து செயற்பட்டவர் என்ற  முறையிலும், பல உலக ராஜதந்திரிகளுடன் எமது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தவர்  என்ற ரீதியிலும் இன்று இருக்கக் கூடிய முதிர்ந்த அனுபவமிக்க தமிழ் இனத்தின் பிரச்சினைகளை முற்றுமுழுதாக அறிந்தவர் என்ற ரீதியிலும் தற்போதைய தமிழ்த் தலைவர்களுக்குள் தங்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  தலைவராகத் தேர்வு செய்து தமிழ்மக்களை வழிநடத்துவதற்குத் தமிழ்த் தரப்பால் ஜனநாயக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அஙகீகாரமும், ஆணையும் தங்களுக்கு வழங்கப்பட்டது.

அந்தப் பொறுப்பினைத் தாங்கள் கவனத்தில் எடுத்து தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரமுள்ள பூரண சுய ஆட்சியைப் பெறத் தாங்கள் இந்தியா உட்பட உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் எல்லாவற்றுடனும் கலந்துரையாடித் தமிழர்களுடைய தீர்வினை விரைவுபடுத்த வேண்டுமெனத் தங்களை விநயமாகவும், தயவுடனும் கேட்டுக் கொள்கின்றேன். இதுவே தமிழ்மக்களுக்குச் செய்யக் கூடிய மிகச் சிறந்த பணியாக அமையுமென நாம் கருதுகிறோம் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

(செ.ரவிசாந்)