கோப்பாயில் திரண்ட மக்கள்: மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் தின நிகழ்வுகள் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக இராசபாதை வீதியிலுள்ள காணியொன்றில் நேற்றுத் திங்கட்கிழமை(27.11.2023) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.


நேற்றுப் பிற்பகல்-06.05 மணியளவில் மாவீரர் பொதுச் சுடரினைத் தாயக மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர் கப்டன் புலிரஞ்சனின் தாயார் பாஸ்கரன் புவனேஸ்வரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிக்க மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பொதுக் கல்லறையில் மாவீரர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வானில் ஐந்திற்கும் மேற்பட்ட புகைக் கூண்டுகள் பறக்கவிடப்பட்டன. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பெருமளவானோர் திரண்டமையால் மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்ற காணிக்கு வெளியேயும் பல நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று அமைதியாக அஞ்சலி செலுத்தியமையை அவதானிக்க முடிந்தது. 

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சில சிறுவர்கள் போராளிகள் போன்று உடையணிந்து நின்றமை பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

மேற்படி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், மாவீரர்களின் உறவுகள், முன்னாள் போராளிகள், இந்து-கிறிஸ்தவ மத குருமார்கள், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வருகை தந்து கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவுகள் பிள்ளைகள், உறவுகளுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியமையால் அப் பகுதியே சோகமயமானது.