உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் புதிய நிழல்பிரதி இயந்திரம் கையளிப்பு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் வாராந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(03.11.2023) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் சிறப்புற நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்.உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நிர்வாகம் அண்மையில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்திடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கமைய நான்கு லட்சம் ரூபா பெறுமதியான புதிய நிழல்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது. கல்லூரிச் சமூகத்தினர் சார்பில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பாடசாலை அபி விருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் சி.தயானந்தராசா, ஆசிரியர்களான த.ரதீஸ்வரன், சி,ஜெயபிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டு நிழல்பிரதி இயந்திரத்தை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுச் சென்றனர்.  

அத்துடன் யாழ்.அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம்-06 இல் கல்வி பயிலும் பொருளாதார நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த மாணவியொருவரிற்கு 47,500 ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டியும் கையளிக்கப்பட்டது. 


(செ.ரவிசாந்)