மன்னாரில் பிறந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னையில் காலமானார்

 


இலங்கையின் மன்னாரில் பிறந்தவர் போண்டா மணி (இயற்பெயர் - கேதீஸ்வரன்). அகதியாக ராமேஸ்வரம் சென்று பின் 175 திரைப்படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 19.09.1963 இல் பிறந்து இவர் தனது 60 ஆவது வயதில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான 'தனிமை' படத்தில் நடித்திருந்தார். வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டன.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (டிச.23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

நகைச்சுவை உலகில் தனி முத்திரை பதித்த போண்டாமணியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.