வட்டுக்கோட்டையில் இன்று போராட்டம்: புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழு ஆதரவு!

நாகராசா அலெக்ஸின் படுகொலைக்கு நீதி கோரித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2023) வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டத்திற்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து தமது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக மேற்படி கட்சியும், பொது அமைப்பும் இணைந்து ஊடகச் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இவ் ஊடகச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாகராசா அலெக்ஸ் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலிலிருந்த போது சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டிய பொலிஸாரே இவ்வாறு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

குறித்த இளைஞருக்கு நீதி கிடைக்கவும், இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்கவும் உரிய தரப்புக்கள் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம். 

இன்று மாலை அலெக்ஸிற்கு நீதி கோரி வட்டுக்கோட்டைச் சந்தியில் இடம்பெறும் கண்டனப் போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அந்த ஊடகச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.