ஈழத்தமிழர் போராட்டத்தின் மீது இறுதிக் காலம் வரை மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டிருந்தவர் விஜயகாந்த்!

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும், பற்றும் கொண்டு தனது இறுதிக் காலம் வரை விஜயகாந்த் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக விஜயகாந்த் நிறைந்திருந்தார் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து இரங்கல் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,      

தமிழ்த் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழகத்  தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமானபெருமதிப்பிற்குரிய விஜயகாந்த் சுகவீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ் வேளையிலே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது இழப்பிலும், அவரது குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதுடன் எமது ஆழமான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.