மீண்டும் கிடைத்தது நல்லூர்ச் சிவன் தேர்த் திருவிழாவில் திருட்டுப் போன துவிச்சக்கரவண்டி!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா கடந்த புதன்கிழமை(27.12.2023) காலை இடம்பெற்றது. குறித்த ஆலயத் தேர்த் திருவிழாவில் திருட்டுப் போன குடும்பப் பெண்மணியின் துவிச்சக்கரவண்டி மீண்டும் கிடைத்துள்ளது.     

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மேற்படி ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நல்லூரைச் சேர்ந்த குடும்பப் பெண்மணி ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியை மேற்படி ஆலயத்திற்கு அருகில் வீதியோரமாகத் துவிச்சக்கரவண்டியை நிறுத்திப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். தேர் இருப்பிடம் சென்றடைந்த பின்னர் குறித்த குடும்பப் பெண்மணி துவிச்சக்கரவண்டி நிறுத்திய இடத்தில் சென்று பார்த்த போது துவிச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த குடும்பப் பெண்மணியின் கணவர் முச்சக்கரவண்டிச் சாரதியாகவுள்ள நிலையில் துவிச்சக்கரவண்டித் திருட்டால் மேற்படி குடும்பத்தினர் பாதிப்பினை எதிர்கொண்டிருந்தனர். இந் நிலையில் மேற்படி ஆலயத் தொண்டர்கள் சிவன் ஆலயத்திற்கு அண்மித்துள்ள வெறும் காணியொன்றில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது தகரத்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருட்டுப் போன துவிச்சக்கரவண்டி மீண்டும் மீட்கப்பட்டு நேற்றுச் சனிக்கிழமை குறித்த குடும்பப் பெண்மணியிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இதனால், மேற்படி குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

(செ.ரவிசாந்)