யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இடம்பெற்ற அவசரக் கலந்துரையாடல்!


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை(23.12.2023) முற்பகல்-10.15 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.  

மேற்படி கலந்துரையாடலில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மற்றும் சிவில், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியில் வடக்குக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரடியாகச் சந்தித்து 28 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப் பொது அமைப்புக்களின் கையொப்பங்களுடன் கூடிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளிப்பதெனப் பிரதானமாகத் தீர்மானிக்கப்பட்டது.

சிவில் தரப்பினருடன் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துப் பொதுக் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதெனவும், வெளிமாவட்டங்களில் செயற்படும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மெய்நிகர் வழிக் கலந்துரையாடலொன்றை விரைவில் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

(செ.ரவிசாந்)