இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம்

தமிழ் ஆன்மிகத் தலைவர்கள், 69 தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை!

 திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும், குயுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும்,  இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம்.

இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரத்தின் மையப் புள்ளியாக விளங்குவது சிங்கள பௌத்த மேலாண்மைக் கருத்தியல் ஆகும். இந்தக்  கருத்தியலைச் சூழக் கட்டமைக்கப்பட்ட வெகுசனக்கவர்ச்சி அரசியலே, அரசியல் அதிகாரத்தைக்  கைப்பற்றுவதற்குத் தேவையான தேர்தல் வாக்குப்பலத்தை வழங்குகிறது. அத்துடன் ஆட்சியாளர்கள் பிற தேசிய இனங்களையும், தமது இனத்தில் உள்ள எதிர்க் கருத்தாளர்களையும் ஒடுக்குவதற்குத் தேவையான அங்கீகாரத்தையும் இக்கருத்தியலே வழங்குகிறது. ஆட்சியின் வினைத்திறனின்மை, ஊழல் போன்றவற்றை சகித்தும் அங்கீகரித்தும் செல்வதற்கான மனநிலையையும் இந்த கருத்தியலே தோற்றுவிக்கிறது.

சிங்கள பௌத்த மேலாண்மை அடிப்படையிலான அரசுக் கட்டமைப்பு, பண்பாட்டுக் கட்டமைப்பு, அவற்றின் விளைவாக எழுந்த அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்பவற்றை அதே தளத்திலிருந்து, அந்தத் தளத்தை அங்கீகரித்து மேற்கொள்ளப்படும் வளைந்து கொடுத்தல் நடவடிக்கைகளினூடாக அணுக முடியாது.

மாறாக, மேலாதிக்கக் கருத்தியலாலும் அதன் கருவிகளாலும் அடக்குமுறைக்கு உட்படும் மக்கள் சமூகங்களினது அரசியல் அந்தஸ்தை  வரையறுத்து, ஏற்றுக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் செய்யப்படும் அரசியல் ஏற்பாடுகளின் ஊடாகவே இந்த நெருக்கடிகளுக்கான தீர்வு அணுகப்பட முடியும்.

இதன் அடிப்படையில் ஒடுக்கப்படும் ஒரு மக்கள் சமூகமான தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து அதன் அடிப்படையில் அரசியல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத்  தேர்தல் ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்டும் அதற்குப் புறம்பாகவும் ஏறத்தாழ கடந்த ஏழு தசாப்தங்களாக கோரி வருகின்றனர். தேர்தல் வழி வந்த தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகளும், அதனை விடுத்து புரட்சிகர அரசியலை முன்னெடுக்க விழைந்த இளைஞர் இயக்கங்களும், ஒருமித்து முன்வைத்த திம்புக் கோட்பாடுகள் இந்த நெடும் பயணத்தில் உருவான மிக முக்கியமான கொள்கை நிலைப்பாடாகும். அந்தக் கொள்கை நிலைப்பாட்டை மேலுயர்த்தி தமது போராட்டத்தைத் தொடர்வதற்கு தமிழ் மக்கள்  கொடுத்த விலை அளப்பரியது.

உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ‘இமயமலைப் பிரகடனம்’  வெளிப்படுத்தும் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு எனும் கூற்றுக்கள், மேற்குறிப்பிட்டவற்றை முற்றிலும் புறமொதுக்கி, இப் பிரச்சினையைப்  புரிந்துணர்வின்மைப் பிரச்சனையாகவும் தனிமனித-குழு அடிப்படையிலான மனித உரிமைப் பிரச்சனையாகவும் கோட்பாட்டுச் சிதைப்பினை மேற்கொள்கின்றன. இப்பிரச்சனையை அற நீக்கமும், அரசியல் நீக்கமும் செய்ய விளைகின்றன. சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியலின் சகிப்பு எல்லைகளுக்குள் குறுக்க முயல்கின்றன.

இப் பிரகடனத்தின் ஐந்தாவது கூற்று, சிங்கள-பௌத்த கருத்தியலின் நிறைவேற்று எந்திரமாகிய அரசையும் அதன் வன்முறைக் கருவிகளான முப்படைகளையும் பொறுப்புக்கூறலில் இருந்து விடுவித்து, அரச கட்டமைப்புக்கு வெளியில் உள்ள சில பௌத்த துறவிகள், அமைப்புகள் என்பவற்றை மட்டும் அதனுடன் பிணைக்கிறது. இது மிகவும் பாரதூரமான ஒரு அரசியல் சதியாகும்.

கூட்டாக கையெழுத்திடப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்குப் பின்னதாக வெளியிடப்பட்ட உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தினரின் கூட்டறிக்கை, உலகத் தமிழர் பேரவையின் குரலாக மட்டுமே வெளிப்படுகிறது. தேவையான, மிகக் குறைந்த அளவிலான நல்லெண்ண சமிக்ஞையை வழங்கப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்திலும் கூட சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம்  மௌனம் காக்கிறது.

சிங்கள பௌத்த மேலாண்மைக் கருத்தியலாலும் அதன் அரசியல் திட்டங்களாலும் இதுவரை விளைந்த பேரழிவுகள் குறித்த ஏற்றுக் கொள்ளுகையோ, சிறுவருத்தமோ கூட்டு அறிக்கையில் சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தின் குரலாக வெளிப்படுத்தப்படவில்லை.

அதேபோல், பிரகடனம் கையெழுத்திடப்பட்ட காலத்திலும் அதன் பின்னரும், அதாவது சமகாலத்தில்  சிங்கள பௌத்த பீடங்களின் தலைமையால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொல்லியல் சார்ந்த செயற்றிட்டங்கள், குருந்தூர் மலை விவகாரம், மயிலத்தமடு விவகாரம் என்பவை குறித்தும் கனத்த மௌனத்தை சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் கடைப்பிடிக்கிறது.

இதற்குச் சமதையாக, இவ்வுரையாடல் முயற்சியைத்  தொடங்கும் பொழுது, தமிழ் மக்களின் மத்தியில் எரியும் பிரச்சினைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும், வலிந்து காணாமலாக்கப் பட்டோர் விவகாரம், அரசியற் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர் பிரயோகம், நினைவு கூர்தலுக்கான உரிமை மறுப்பு என்பவை தொடர்பாக, மறுதரப்பினர் வழங்கக் கூடிய நல்லெண்ண சமிக்ஞைகள் தொடர்பான எந்தக் குறிப்புகளையும் உலகத் தமிழர் பேரவை சுட்டிக் காட்டவில்லை.

போர் நிகழ்ந்த காலத்திலும் அதன் பின்னரான இப் பதினைந்து  ஆண்டுக் காலத்திலும் அழிவுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆட்பட்டவாறு தமது வாழ்வைத்  தாயக மக்கள் தொடர்கின்றனர்.

அவர்களுக்காக குரல் கொடுக்கவும் தீர்வுக்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளவும் அனைவருக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அவற்றை மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், தாயகத்தில் வாழும் மக்களின்  சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும்  அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகமயமாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ நலன்களுக்கு இசைவாக பூகோள அரசியல் ஒழுங்குகள், தேசிய அரசுகளுக்கு உட்பட்ட அரசியல் சமூக பொருளாதார ஒழுங்குகள் என்பவற்றை முன்னிறுத்தி உள்நாட்டு பிரச்சினைகளின் தன்மைகளையும், கதையாடல்களையும் மீள கட்டமைப்புச் செய்யும் சர்வதேச அரசியல் அட்டவணைக்கு ஏற்பவே இமயமலைப் பிரகடன முயற்சி நிதியீட்டம் செய்யப்பட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்துள்ளோம்.

உலகங்கெணும் வாழும், அரசியல் பொருளாதார அடக்குமுறைக்கு உட்படும், நேரடியான அரச வன்முறைக்கு உட்பட்டுவரும், அரசற்ற தேசிய இனங்கள், விளிம்பு நிலை மக்கள் என பல்வேறுபட்ட தரப்பினரை குரலற்றவர்களாக மாற்றும் பாரிய கருத்தியல் மேலாதிக்கத் திட்டங்கள், குறித்து நாம் விழிப்புடன் இருக்கிறோம்.

இப்பூமியின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் ஒரு பொருளாதார அரசியல் முறைமையின் அரூபகரங்கள் எம்மைச் சூழ்ந்திருப்பதை நாம் அறிவோம். உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தினர் வெளியிட்டுள்ள இமயமலைப் பிரகடனம் இவ்வரூப கரங்கள் பின்னும் மாய வலையின் ஒரு கண்ணிதான் என்பதும் எமக்கு தெரியும்.

அவற்றுக்குப்  பொருத்தமான வகையில் எதிர்வினையாற்றக்கூடிய பரந்த அரசியல் முன்னணியை தேசிய எல்லைகளுக்கு உட்பட்டும், அதற்கு வெளியேயுள்ள  புலம் பெயர் தமிழ் மக்களையும் உள்வாங்கி, தாயகத்தில் வாழும்  ஒடுக்கப்படும் மக்கள் உருவாக்குவர் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறோம்.

பல்வேறு நோக்கு நிலைகளைக் கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் மத்தியில் உள்ள, பல குழுக்களில் ஒன்றான உலகத் தமிழர் பேரவைக்கும் சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலைப் பலம் மிக்க வகையில் முன்கொண்டு செல்லும் சங்க அமைப்புகளின் மத்தியில், இருக்கும் பல அமைப்புக்களில் ஒன்றான சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்திற்கும் இடையிலான உரையாடல் என்ற அளவில் மட்டும் இம்முயற்சி கட்டமைக்கப்பட்டு  வெளிப்படுத்தப்பட்டால், இம் முயற்சிக்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. அவ்வாறன உரையாடல்கள் நிகழ்வதும் காலத்தின் தேவைதான்.

ஆனால்,நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானத்தை அடைவதற்கு, அறத்தின் பாற்பட்டும், தர்க்கத்தின் பாற்பட்டும், நீதியின் பாற்பட்டும் அவசியமானதும் அடிப்படையானதுமான  திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும், குயுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும்,  இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம்.

தவத்திரு அகத்தியர் அடிகள்,

தென்கையிலை ஆதீனம்,

திருகோணமலை பேரருட்திரு கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவல்,

ஆயர்,

திருகோணமலை

திருவருட்பணி ளு.னு.P. செல்வன்,

குருமுதல்வர்,

யாழ் குருமுதல்வர் பிராந்தியம்,

இலங்கைத் திரு அவை,

கொழும்பு மாவட்டம். அருட்பணியாளர் P. து. யெபரட்ணம்,

குருமுதல்வர்,

யாழ்கத்தோலிக்க மறைமாவட்டம்

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்

• பேராசிரியர் மு. வு. கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

• கலாநிதி யு. சரவணபவன் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

• கலாநிதி ஏ. சிறீதரன் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

• திரு ளு. சிவகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

• திரு ளு. சூரியகுமார் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

• அகரம் மக்கள் மய்யம்

• அடையாளம், கொள்கை ஆய்வுக்கான நிலையம்

• அம்பாறை மாவட்ட சிவில் சமூக ஒருங்கிணைப்புக்குழு

• அரண், திருகோணமலை

• ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையம்

• ஆனைக்கோட்டை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்

• இலங்கை ஆசிரியர் சங்கம்

• ஐக்கிய பெண்கள் குரல், திருகோணமலை

• கிராமிய உழைப்பாளர் சங்கம்

• கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்.

• குமரன் சனசமூக நிலையம்

• குமரன் விளையாட்டுக் கழகம்

• குரலற்றவர்களின் குரல்

• குறிஞ்சி குமரன் சனசமூக நிலையம், குப்பிளான்

• கைதடி குமரநகர் சனசமூக நிலையம்

• கைதடி குமரநகர் விளையாட்டுக் கழகம்

• கைதடி தென்கிழக்கு சனசமூக நிலையம்

• கைதடி தென்கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்

• கைதடி தென்மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்

• கைதடி நாவற்குழி செல்வா சனசமூக நிலையம்

• கைதடி மக்கள் நலன்பேணும் நட்புறவு கழகம்

• கைதடி மாதர் சங்கங்களின் ஒன்றியம்

• கைதடி வடக்கு செல்வா சனசமூக நிலையம்

• கைதடி வடக்கு செல்வா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்

• சந்திரபுரம் மாதர் கிராம் அபிவிருத்திச் சங்கம்

• சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

• சித்தி விநாயகர். இளைஞர் கழகம் ஆனைக்கோட்டை

• சுயம்பு – கலை பண்பாட்டு செயல்திறன் மையம், யாழ்ப்பாணம்

• சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பு வவுனியா

• சேவகம் பெண்கள் அமைப்பு

• தமிழர் மரபுரிமை பேரவை

• தமிழ் சட்டத்தரணிகள் பேரவை

• தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள்  இணையம்

• தமிழ் சிவில் சமூக அமையம்

• தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம்

• தளம்

• தாயகம் ஜனனம் அமைப்பு

• தாவடி வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்

• தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், முல்லைதீவு

• நவசக்தி சனசமூக நிலையம்

• நவசக்தி மாதர் கிராம் அபிவிருத்திச் சங்கம்

• நவாலி மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்

• நவாலியூர் சோமசுந்தர புலவர் அறக்கட்டளை நிதியம்

• நீதி சமாதான ஆணைக்குழு யாழ்ப்பாண மறைமாவட்டம்

• நீதி சமாதான ஆணைக்குழு, யாழ் மறைமாவட்டம்

• நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் துறவிகள் அமைப்பு, வடக்கு கிழக்கு

• நீதிக்கும் மாற்றதிற்குமான நிலையம் – திருகோணமலை

• பிரஜைகள் குழு மன்னார்

• புழுதி – சமூக உரிமைகளுக்கான அமைப்பு

• பொத்துவில் தொடக்கம் பொலகண்டி வரை மக்கள் இயக்கம்

• பொது அமைப்புகளின் ஒன்றியம் மன்னார்

• மட்டக்களப்பு ஊடக மையம்

• மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்.

• மின்னொளி சனசமூக நிலையம்

• மின்னொளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்

• மின்னொளி விளையாட்டுக் கழகங்கம்

• முல்லைத்தீவு ஊடக மையம்

• முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்

• மூதூர் இந்து இளைஞர் மன்றம்

• யாழ் ஊடக மையம்

• யாழ் கிறிஸ்தவ ஒன்றியம்

• யாழ் மாவட்ட இணையம்

• யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்

• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

• யாழ்ப்பாணப் பொருளியலாளர் சங்கம்

• வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அமைப்பு

• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கு கிழக்கு

• வவுனியா ஊடக மையம்

• வளர்மதி மட்டுவில் சனசமூக நிலையம்

• விழிசிட்டி சனசமூக நிலையம்