செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் கிறிஸ்தவக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த நத்தார் விழா ஞாயிற்றுக்கிழமை (17.12.2023) காலை-10 மணி முதல் யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள மேற்படி நிறுவன மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி நிறுவனத்தின் கிறிஸ்தவக் கழகத் தலைவர் ஈ. திருக் கோணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழா நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் சுரேஸ்குமார், நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகுமாரன், நல்லூர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரியதர்சினி, கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலனற்றோர் பாடசாலையின் முன்னாள் அதிபர் சாம்சன் லூர்திஸ், செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் கே.பிரகாஸ் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நல்லூர் பரி.யாக்கோபு ஆலய உதவிப் பங்குத் தந்தை அருட்பணி அருளம்பலம் ஸ் ரீபன் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தனுஷன் விதுரா மற்றும் ராஜ் சுகந்தி குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் என 150 பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நத்தார் தினப் பரிசில்களாக கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் நத்தார் தாத்தா நடன நிகழ்வு அரங்கேறிய போது பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்களும் நத்தார் தாத்தாவுடன் இணைந்து நடனம் ஆடித் தமது மகிழ்வினை வெளிப்படுத்தினர்.