வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் பொலிஸ் நிலையமே அல்ல சித்திரவதைக் கூடமே!

வட்டுக்கோட்டைப் பொலிஸார் இங்கு பொலிஸ் நிலையம் நடாத்தவில்லை. சித்திரவதைக் கூடமே நடாத்தி வருகின்றனர். வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தெரியத்தக்கதாக சித்திரவதைகள் இடம்பெற்று வருகின்றன எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் உறுதிபடத் தெரிவித்தார்.    

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் நாகராசா அலெக்ஸின் படுகொலைக்கு நீதி கோரி ஞாயிற்றுக்கிழமை(03.12.2023) மாலை வட்டுக்கோட்டைச் சந்தியில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,      

அலெக்ஸுடன் சித்திரவதைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும், தொடரக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அப்பாவியான அலெக்ஸிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சித்திரவதைகளும், இலஞ்ச ஊழல்களும் முற்றுப் பெற வேண்டுமென்பதற்காகவும் நாங்கள் இங்கு திரண்டிருக்கின்றோம்.  

வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் ஒரு வாழைத் தோட்டமிருக்கிறது. இரவிரவாக அந்த வாழைத் தோட்டத்திற்குள் வைத்துப் பொலிஸார் அப்பாவிகளைத்  துன்புறுத்துகிறார்கள். சற்றுத் தொலைவில் ஒரு சுடலை இருக்கிறது. அந்தச் சுடலைக்கு அப்பாவிகளைக் கொண்டு சென்று நட்ட நடு ஜாமத்தில் கொட்டுற மழைக்கு மத்தியில் அடித்துச் சித்திரவதை செய்து வாக்குமூலங்களைப் பெற்றுப் பொய்யான வழக்குகள் போடுகிறார்கள்.

தற்போது கூட அமைதிவழிப் போராட்டத்தைக் குழப்புவதற்காகப் பொலிஸார் இங்கு வந்துள்ளனர். மக்கள் இதனை விளங்கிக் கொண்டு அராஜகத்தைத் தட்டிக் கேட்க வேண்டும். அலெக்ஸிற்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.