காரைநகர் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையில் விடுதலை!

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12  இந்திய மீனவர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற  நிபந்தனையின் அடிப்படையில் நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 12 இந்தியாவின் தமிழக மீனவர்கள் மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கடந்த-13 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

குறித்த 12 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ்.மாவட்டக் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (26.01.2024) முன்னிலைப்படுத்தினர். 12 இந்திய மீனவர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.    

குற்றம் நடந்த போது ஒரு படகின் உரிமையாளர் படகில் பயணித்தமையால் அவரது படகைப் பறிமுதல் செய்தும், ஏனைய இரண்டு படகுகளின் உரிமையாளர்களும் படகிலிருக்காத காரணத்தால் அவர்களை முதலாவது சந்தேகநபராகக் கருதி வெளிவிவகார அமைச்சின் ஊடாக அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.