வடக்கு வரும் ஜனாதிபதிக்கு மக்கள் எதிர்ப்பினைக் காட்ட வேண்டும்: செந்திவேல் வலியுறுத்தல்!

மக்கள் விரோதத் திட்டங்களை நியாயப்படுத்தவும், தமிழ்மக்களை ஏமாற்றிப் பொய் வாக்குறுதிகளை வழங்கி தமது வாக்கு வங்கிக்கிக்குப் பலம் சேர்ப்பதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ் வேளை நாட்டின்  அனைத்து மக்களையும் பட்டினிக்குள் தள்ளி வரும் இன்றைய ஆட்சியினருக்கு எதிராக மக்கள் காட்டி வரும் எதிர்ப்புக்கள் போன்று வடபுலத்து மக்களும் தமது எதிர்ப்பினைக் காட்ட வேண்டுமெனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடைமைவாதியுமான சி.கா.செந்திவேல் வலியுறுத்தியுள்ளார்.      

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

கடந்த 45 வருடங்களில் பிரிவினைவாதம் பயங்கரவாதம், தீவிரவாதம் எனக் காட்டிப் பல லட்சம் மக்களைக் கொன்றளித்து வந்த ஆளும் வர்க்க ஆட்சியாளர்கள் தற்போது பெறுமதிசேர் (வற்) வரி மற்றும் வரிகள் விதிப்பு மூலம் பொருட்கள், சேவைகளுக்கான விலை அதிகரிப்புக்களைச் செய்து நாட்டு மக்களைப் பட்டினியால் கொன்றழிப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள்.

இவை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினது ஆலோசனைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டே வரவு செலவுத் திட்டம் மற்றும் சட்ட நிறைவேற்றங்கள் மூலம் ரணில்  தலைமையிலான ரணில்-ராஜபக்ச அரசாங்கம் வேகமாகச்  செயற்பட்டு வருகிறது.

கடந்த 45 வருடங்களாக நடைமுறையிலிருந்து வரும் அரசியல் அமைப்பும், அதன் கீழான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையும், சிங்கள-பௌத்தப் பேரினவாத  முன்னெடுப்புக்களும் நாட்டின் அரசியல்,பொருளாதார, சமூகத் துறைகள் அனைத்தையும் நாசமாக்கி அழிவுகளுக்கு உள்ளாக்கி விட்டன.

இத்தகைய அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்தவை உலகமயமாதலின் கீழான தாராளமயமும், தனியார்மயமும், இறக்குமதியும், நுகர்வும் திணிக்கப்பட்டமையுமாகும். அதேவேளை நாட்டின் உற்பத்தித் துறைகள் யாவும் அழியவிடப்பட்டு நாடு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்றும் கூட அந்நியக் கடன் பெறுவதிலும், அவற்றுக்கான நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நாட்டின் வளங்களை அந்நியக் கோப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதிலேயே ஆட்சியிலிருப்போர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள்.

நாடு அந்நிய வல்லரசுகளுக்குக் கூறு போட்டு விற்கப்படுகிறது. இவ்வாறான வெட்கம், மானம் கெட்ட நிலையிலேயே அடுத்த ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு ஆயத்தங் கள் செய்கிறார்கள். அதற்குத் தமிழ்மக்கள் மத்தியில் ஆட்கள் தேடுகிறார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.