கீரிமலையைச் சேர்ந்த அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான இலவச யோகாசனப் பயிற்சி வகுப்புக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.01.2024) யாழ்.கீரிமலையில் அமைந்துள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலாளரும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் கலந்து கொண்டு இலவச யோகாசனப் பயிற்சி வகுப்பினைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பயிற்சி வகுப்பின் ஆரம்பநாள் நிகழ்வில் 25 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அத்துடன் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை-10 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரை நடைபெறவுள்ள குறித்த இலவச யோகாசனப் பயிற்சி வகுப்பில் கீரிமலையைச் சேர்ந்த அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமெனப் பயிற்சி வகுப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உலக சமாதான ஆலயத்தின் யாழ்ப்பாணக் கிளை மேற்படி பயிற்சி வகுப்பிற்கான அனுசரணையை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)