உடுப்பிட்டி மதுபானசாலைக்கெதிராகச் சரியானதொரு தீர்வு எடுக்கப்படாவிடில் யாழில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் ஒருநாள் நிகழ்விற்கெதிராக எங்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்த வேண்டி ஏற்படும். ஜனாதிபதியாலும் குறித்த மதுபானசாலையை அங்கிருந்து அகற்ற முடியாவிடில் எங்கள் இளைய சமுதாயம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.
உடுப்பிட்டி இமையாணன் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அங்கிருந்து அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று முன்தினம் புதன்கிழமை(03.01.2023) உடுப்பிட்டி சிவில் சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உடுப்பிட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்பவற்றின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த அனைவரும் மதுபானசாலைக்கு ஏன் உடந்தையாகச் செயற்படுகிறார்கள் என்பதில் எங்களுக்கு ஐயமாகவுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுங்கள் என்று கூறியிருந்தால் கரவெட்டிப் பிரதேச செயலாளர் மதுபானசாலைக்கான அனுமதியைக் கொடுத்திருக்க மாட்டார். ஏன் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை? இதனால், யாருக்கு என்ன நன்மை? என்று தெரியவில்லை.
இதனால் தான் உடுப்பிட்டி மக்கள் ஜனாதிபதிக்கான மகஜரைக் கையளித்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.