சிறப்பிக்கப்பட்ட சுன்னாகம் மயிலணி முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா

யாழ்.சுன்னாகம் மயிலணி முத்துமாரியம்மன்(வடலியம்மன்) ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் புதன்கிழமை(24.01.2024) கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

அதிகாலை-05.30 மணியளவில் விநாயகர் வழிபாடு, 108 சங்காபிஷேகம், தம்ப பூசை  என்பன இடம்பெற்றன. காலை-08 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முத்துமாரி அம்மன் அலங்கார நாயகியாகத் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளிப் பின்னர் காலை-10 மணியளவில் ஆலய முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சித்திரத் தேரில் எழுந்தருளினார்.

அடியவர்களால் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, நாதஸ்வர தவில் முழக்கங்களுடன் சித்திரத்தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்ளும், பெண் அடியவர்களும் இணைந்து சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.


ஆண் அடியவர்கள் சிலர் அங்கப் பிரதட்ஷணை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலில் பானங்களும் பரிமாறப்பட்டன.

தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த்திருவிழாக் கிரியைகளைச் சிறப்புற ஆற்றினர். இதேவேளை, இவ் ஆலயத் தீர்த்தத் திருவிழா தைப்பூசத் திருநாளான நேற்று வியாழக்கிழமை (25.01.2024) காலை இடம்பெற்றதுடன் நேற்று மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.    

(செ.ரவிசாந்)