மக்களின் எதிர்ப்பை மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி நாளை புதன்கிழமை உடுப்பிட்டியில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன.
இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒன்றுகூடிய உடுப்பிட்டியை சேர்ந்த 21 சமூகமட்ட அமைப்புகள் இந்தப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்தன. இந்தத் தீர்மானத்துக்கு உடுப்பிட்டியில் இயங்கும் வர்த்தக நிலையங்கள், கடைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.
நாளை புதன்கிழமை காலை 10 மணியளவில் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் அத்துடன், உடுப்பிட்டி சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டியில் பாடசாலை மற்றும் மதத் தலங்களுக்கு அண்மையாக குடிமனைகளுக்கு மத்தியில் மதுபான சாலை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது. இந்த மதுபானசாலையை அகற்றுமாறு உடுப்பிட்டி மக்களும் பொது அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.
இதையடுத்து, பூட்டப்பட்ட மதுபானசாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் மீளவும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக கரவெட்டி பிரதேச செயலர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை உடுப்பிட்டி சமூக மட்ட அமைப்புகள் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடின. தான் நேரில் வந்து இரு நாட்களில் தீர்வு தருவதாக அவர் உறுதியளித்திருந்தார். எனினும், இரு வாரங்கள் கடந்தும் இந்த விடயத்துக்கு அவர் தீர்வை முன்வைக்கவில்லை.
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்துக்கு கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி நடந்த கூட்டத்தில் கஜேந்திரன் எம். பி. கொண்டு வந்திருந்தார். எனினும், இதற்கும் சரியான தீர்வு முன்வைக்கப்படவில்லை.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அவர்களும் போராடும் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களிலும் பங்கேற்றதோடு செய்தியாளர் சந்திப்புக்களையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே நாளைய தினம் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.