உத்தேச கடற்சட்டத் திருத்த வரைவு மிகவும் கபடத்தனமானதொரு சட்டம்!


உத்தேச கடற்சட்டத் திருத்த வரைவு மிகவும் கபடத்தனமானதொரு சட்டம். பொதுமக்களுடனோ, மீனவ சமூகத்துடனோ கலந்துரையாடாத, விவாதிக்காத ஒரு சட்டம் எனப் பொருளாதார, சமூக ஆய்வாளரும், ஓய்வுநிலை மூத்த நிர்வாக அதிகாரியுமான இ.செல்வின் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்ககத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு நிகழ்வு அண்மையில் யாழ்.கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

தலைநகரில் குறிப்பிட்டதொரு கூட்டத்தினர் தங்களுக்குள் திட்டமிட்டுத் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கவனமாக, நுட்பமாகத் தயாரித்துவிட்டு அலுவலக மட்டத்தில் கலந்துரையாடி விட்டு நாங்கள் மாவட்ட மட்டத்தில், பிரதேச மட்டத்தில், மாகாண மட்டத்தில் கலந்துரையாடினோம் என்று ஏமாற்றிச் சட்டமாக்க முயற்சிக்கின்றார்கள். 

இந்தச் சட்டத் திருத்தத்தினால் எங்களை விடச் சிங்கள மீனவர்கள் மிக மோசமான கோபம் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் சிறு மீன்பிடியாளர்கள் சங்கத்தினருக்கு இப்படியொரு சட்டம் உருவாக்கப்படுவதே தெரியாது. இந்தச் சட்டம் ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் கடல் வளத்தையே கபளீகரம் செய்யும் சட்டம்.

இந்திய மீனவர்களின் றோலர் படகுகளின் அத்துமீறலை நிறுத்த வேண்டுமெனக் கோரி வடக்கு- கிழக்கு மீனவர்கள் போராடி வருகிறார்கள். எனினும், உத்தேசக் கடற்சட்டம் அனுமதி எடுத்து தொழில் செய்யலாமெனக் கூறுகின்றது. எதனை நாங்கள் மறுக்கின்றோமா அதற்குச் சட்டரீதியான அனுமதி கொடுக்க அரசாங்கம் முனைகின்றது. இந்த நாட்டுக்குத் தற்போது வெளிநாட்டுப் பணம் தான் தேவையாகவுள்ளது. இதற்கு ஆசைப்பட்டே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  எங்கள் நிலம், நீர் வளம், கடல் வளம், கரையோர வளம் அனைத்தும் எங்களிடமிருந்து மிகத் தொலைநோக்குடனே அபகரிக்கப்படுகின்றது. ஆனால், நாங்கள் இங்கு பேசுகின்ற அரசியல் வேறு.

பருத்தித்துறைக் கடலிலிருந்து நூறு கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றால் ஆழம் கூடிய கடலுக்குள் ஆழம் குறைந்ததொரு இடமாக, மீன்கள் கருவளம் கொள்ளும் பீதுறு கடல் அடித்தள மேடை அமைந்துள்ளது. அதனை இலக்குவைத்துத் தான் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனினும், அங்கு சென்று மீன்பிடித்துவிட்டு வருகின்றளவுக்கு எம் மீனவர்கள் மத்தியில் பலநாள் படகுகள் இல்லை. கரையிலிருந்து தூண்டில் போடுமளவுக்குத் தான் எங்களிடம் இயலுமை இருக்கின்றது. ஆனால், எங்கள் கடல்வளத்தின் ஆளுகை வேறுயாரிடமோ இருக்கின்றது.          

ஒட்டுமொத்தமாக உத்தேசக் கடற் சட்டத்தை மறுப்பதாகவும், இந்தச் சட்டத்தை முற்றுமுழுதாக மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் என மீனவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுமென அமைச்சரவையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்தச் சட்டம் சிறு திருத்தங்களுடன் வெளிவரக் கூடும் என்பதால் நாம் அவதானமாகவிருக்க வேண்டும். முற்றுமுழுதான மீளாய்வே எமக்குத் தேவை.

சட்டங்களை எழுதுபவர்கள் அல்ல முக்கியம். சட்டத்தின் ஆன்மாவைத் தீர்மானிப்பவர்கள் மக்களாகவிருக்க வேண்டும். அந்த மக்களின் அபிவிருத்தி என்பது அரசியல் அபிவிருத்தி, அரசியல் பொருளியலில் மேன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அரசியல் வளங்கள் மக்களுக்குச் சொந்தமானதாக அமைய வேண்டும். தமிழ்மக்கள் தமது அரசியல் சிந்தனையை வெறும் தேர்தல் காலப் புள்ளடியிடலுக்கு அப்பால் இன்னுமொரு பரிணாமத்தில் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளார்கள் எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார். 

(செ.ரவிசாந்)