இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தெரிவு நாளை ஞாயிற்றுக்கிழமை(21.01.2024) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இரகசியத் தேர்தல் வாக்கெடுப்பு மூலம் இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தலில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவர் போட்டியிடுகின்ற போதிலும் சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கிடையிலேயே கடும் போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, அனைவரினதும் ஒத்துழைப்புடன் திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெறும் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.