ஊரெழுவில் கோர விபத்து: இளம் பெண்ணுக்கு படுகாயம்! முதியவருக்கு காயம்!!

ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (17.01.2024) காலை நடந்த விபத்தில் இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முதியவரொருவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  

ஊரெழுவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பலாலி வீதி ஊடாக மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் மோட்டார்ச் சைக்கிளை அங்கிருந்த வர்த்தக நிலையம் நோக்கித் திருப்ப முற்பட்ட போது அதே வீதியால் பின்னால் மோட்டார்ச் சைக்கிளில் அலுவலகம் நோக்கி வேலைநிமிர்த்தம்  வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த அச்செழுவைச் சேர்ந்த குறித்த இளம் பெண்மணியின் மோட்டார்ச் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் குறித்த இளம்பெண்ணுக்குத் தலையிலும், கையிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மயங்கிய நிலையிலும், முதியவர் காலில் காயமடைந்த நிலையிலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களால் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தில் படுகாயமடைந்த இளம்பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுத் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளம்பெண் திருநெல்வேலியில் அமைந்துள்ள வங்கியொன்றில் முகாமையாளராகக் கடமையாற்றி வருவதுடன் முதியவர் ஓய்வுநிலை அதிபராவார். 

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய்ப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.