மட்டக்களப்பு மயிலத்தமடுப் பசுக்களுக்கும், காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து பட்டிப் பொங்கலான நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16.01.2024) மாலை-05 மணி முதல் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், யாழ்.மாவட்ட சர்வமதப் பேரவையின் செயலாளர் இ.ராஜ்குமார், சுதுமலை திருலிங்கேச்சரம் ஆலய சிவாச்சாரியார் அகோரசிவம் உமையரசு, அகில இலங்கை சைவமகாசபையின் தலைவர் நா.சண்முகரத்தினம், அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலாளர் வைத்தியகலாநிதி ப.நந்தகுமார், ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.சிவரூபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.நிரோஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான வ.பார்த்திபன், ப.தர்ஷானந்த், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், தமிழ்ப் புலமையாளர் கே.எஸ்.சிவஞானராஜா, உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ந.விஜயதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், சிவில்- சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அரசே! பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்காதே!, எமது தமிழர்களின் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்புச் செய்வதை வடகிழக்கின் தமிழர் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம்!, வாயில்லா சீவன்களுக்கு வாயில் வெடி வைக்கும் கொடூரர்களை உடன் கைது செய்யுங்கள், மேய்ச்சல் தரை தொடர்பில் நீதிமன்ற உத்தரவை உடன் அமுல்படுத்து!, மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடியை நிறுத்த அரசே உடன் நடவடிக்கை எடுக்கவும்!, பசுக்களைத் தெய்வமாக வழிபடும் நாங்கள் உணவின்றிப் பசுக்கள் படும் துன்பத்தை இனியும் சகியோம்!, பசுக்கள் வடிக்கும் கண்ணீரில் பாதகரே நீர் அழிவீர்!, பட்டிப் பொங்கல் நாளிலே எமது பசுக்கள், காளைகள் மயிலத்தமடுவில் படும் துன்பத்தை இனியும் நாம் பொறுக்க மாட்டோம், மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஈழத்தமிழரின் பூர்வீக நிலம் உள்ளிட்ட பல சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும், பல்வேறு கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
(செ.ரவிசாந்)