காரைநகர்- ஊர்காவற்துறை இடையேயான பாதைச் சேவையில் கூலித் தொழிலாளியை ஏற்ற மறுப்பு!

                               

காரைநகர்- ஊர்காவற்துறை இடையே சேவையில் ஈடுபடும் பாதைச் சேவை அப்பாவிக் கூலித் தொழிலாளி ஒருவரை ஏற்றிச் செல்லாமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுத் திங்கட்கிழமை(19.02.2024) காலை-08.45 மணியளவில் பாதை புறப்படவேண்டிய நேரம் ஆகியும் கூட இரு பெண்களுக்காக காத்திருந்து ஏற்றி விட்டு ஊர்காவற்துறைக்குச் செல்ல வேண்டிய அப்பாவிக் கூலித் தொழிலாளி ஒருவர் கை காட்டியவாறு அருகில் சென்றும் கூட அவரை ஏற்றாமல் சென்றுள்ளனர். இவர்களின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த தாங்கள் இதுதொடர்பில் பணியாளர்களிடம் நியாயம் கேட்ட போதும் அவர்கள் சாட்டுப் போக்குச் சொல்லிவிட்டுச் சென்றனர் எனப் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவையின் போது தமக்குத் தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம். சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர்.

தமக்கு வேண்டிய எவராவது, குறிப்பாகப் பெண்கள் தூரத்தே வந்தாலும் காத்திருந்து அவர்களை ஏற்றிச் செல்லும் பாதைப் பணியாளர்கள் ஏனையவர்கள் விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ் விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.