அத்துமீறிய இந்திய இழுவைமடிப் படகுகளின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.இந்தியத் தூதரகம் நாளை முற்றுகை!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவைமடிப் படகுகளின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை செவ்வாய்க்கிழமை(20.02.2024) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோமென மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.மாவட்டக் கிராமியக் கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம், சம்மேளனத்தின் செயலாளர் அன்ரன் செபராசா, மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் குணரத்தினம் குணராஜன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.02.2024) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.    

இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,    

தற்போது எங்கள் வயிற்றில் அடிக்கக் கூடிய வகையில், எங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் அத்துமீறிய, எல்லை தாண்டிய தொழிலைச் செய்யும் இந்திய மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் இவ்வாறு வந்ததாகக் கூறுவது மிகவும் தவறானது. இலங்கை எல்லைக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிப்பதால் தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்திய எல்லைக்குள் கடற்படையினர் சென்று தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடித்தார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?  

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் வடமாகாணத்தைத் தவிர்த்து இந்தியாவின் அண்டைய மாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்ய முடியுமா? அவ்வாறு தொழில் செய்தால் இந்தியச்  சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்பதால் தான் தொப்புள் கொடி என்ற உறவை வெளிப்படுத்தி இங்கு வந்து தொழில் செய்கிறார்கள்.                

எங்கள் கடற்பரப்புக்குள் உடனடியாக இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்திய இழுவைமடிப் படகுகளை நாங்கள் கடலில் வைத்து எரியூட்ட வேண்டிய நிலைதான் ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி வருகின்றமையால் சட்டபூர்வமான அடிப்படையில் தான் இந்தியாவின் தமிழக  மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுகிறார்கள். கச்சதீவுத் திருவிழாவையும், இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினையையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம். மதம்சார்ந்த வகையில் கைது செய்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை எக் காரணம் கொண்டும் இலங்கை அரசாங்கமும், நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கடற்படையினர் தொடர்ந்தும் கைது செய்யவேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.