சிறப்பிக்கப்பட்ட கீரிமலை மகா முத்துமாரி அம்பாள் தேர்த் திருவிழா

யாழ். கீரிமலை ஸ்ரீ மகா முத்துமாரி அம்பாள் ஆலய சோபகிருது வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(23.02.2024) பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாகவும்,  பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.   

காலை-09.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாள் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி முற்பகல்-11 மணியளவில் சித்திரத் தேரில் எழுந்தருளினார். சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு, விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்கச் சித்திரத்தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் சித்திரத்தேரின் வடம் தொட்டிழுத்தனர்.

சித்திரத் தேர் முற்பகல்-11.45 மணியளவில் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர். சித்திரத் தேர் வீதி உலா இடம்பெற்ற போது போது சிறப்பு இன்னிசை விருந்தும் நடைபெற்றது. 


                              

தேர்த் திருவிழாக் கிரியைகளை மேற்படி ஆலய ஆதீன கர்த்தா சிவஸ்ரீ.நகுல நவராஜ உமாபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். 

இதேவேளை, கடந்த சனிக்கிழமை(24.02.2024) காலை மாசிமகத் தீர்த்தோற்சவத் திருவிழாவும், நேற்றுத் திங்கட்கிழமை(26.02.2024) கப்பல்த் திருவிழாவும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)