இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்: கண்டித்து யாழ்.மாவட்டம் தழுவிய கறுப்புக் கொடிப் போராட்டம்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையைக் கண்டித்து எதிர்வரும்-03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்டக் கிராமியக் கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்.மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளனமும் இணைந்து எமது கடல் எல்லைக்குள் மீனவர்களின் ஆதரவுடன் கறுப்புக் கொடிகள் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இந்தப் போராட்டம் நெடுந்தீவு தொடக்கம் வடமராட்சி கிழக்குப் பகுதி வரையான அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் இணைந்து யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மேற்படி இரு சம்மேளனங்களின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.    

யாழ்ப்பாணத்தில் நேற்றுத் திங்கட்கிழமை(26.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டமொன்று இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுகபோக இலாபத்திற்காக இலங்கை மீனவர்கள் தொடர்பில் ஒருவீதம் கூடக் கருத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமான வகையில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அவர்களின் வாக்குறுதியானது எங்கள் உயிர்கள் மீது குதிரையோட்டம் போலவே எங்களுக்குப் படுகின்றது. இந்த விடயத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சில இந்திய அரசியல் தரப்புக்கள் எமது அரசாங்கத்துடன் பேசி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டிருக்கின்றார்கள். இது நியாயமானதொரு செயற்பாடல்ல. இதுபோன்ற செயற்பாடுகள் இங்கு இடம்பெறுமாகவிருந்தால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கையும் கேள்விக் குறியாகவே அமையும் என்பதை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.