சாந்தனின் ஆன்மா மானுடத்தை மன்னிக்காது!

இந்திய தேசமும், தமிழ்நாடு அரசும் நிரந்தரமாகத் தலை குனியட்டும். சாந்தனின் ஆன்மா மானுடத்தை மன்னிக்காது என தமிழ்ப் பேரரசுக்  கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் உணர்வாளருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த  ஈழத் தமிழரான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவுச்  சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(28.02.2024) காலமானார். இதனைக் கண்டிக்கும் வகையில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

36 ஆண்டுகள் மரண தண்டனை, ஆயுள் தண்டனை என முடித்து விடுதலை கிடைத்த பின்பும் மீண்டும் சிறையிலடைத்த இந்திய அதிகார வர்க்கமும் தமிழ்நாடு அரசும் தங்களது குரூர எண்ணம் கொண்ட மரண தண்டனையை நிறைவேற்றிக் கொண்டது.

எங்கள் சாந்தனின் உயிரைக் குடித்த அதிகார வர்க்கங்களே... தயவு செய்து அவன் உடலை இந்த மண்ணில் புதைத்து விடாதீர்கள். வெறி அடங்கா அகோரி நர மனிதர்களான உங்களது வயிற்றில் சமாதியாக்கிக் கொள்ளுங்கள். கருணையிலா அரசு கடுகி அழிக எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.