கோண்டாவிலில் பக்திபூர்வமாக நடைபெற்ற குடைச் சுவாமிகளின் குருபூசை

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் வருடாந்தக் குருபூசை நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (17.02.2024) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்திலுள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.சிவகதிர்காமநாதக் குருக்கள் தலைமையில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

குடைச் சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டுக் காலை-07.30 மணிக்குத் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகிப் பிற்பகல்-01.30 மணி வரை இடம்பெற்றது. ஓதுவார்கள் மற்றும் பெளராணிகர் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர்.  முற்பகல்-11 மணிக்கு விசேட அபிஷேகமும், பூசை வழிபாடுகளும் நடைபெற்றுத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குருபூசை நிகழ்விற்கான அனுசரணையைக் கோண்டாவில் சந்தி வர்த்தகர்கள் வழங்கியிருந்தனர். (செ.ரவிசாந்)