சிறீலங்காவின் நல்லிணக்கக் கதையாடலின் பொய்மையை அம்பலமாக்கும் வெடுக்குநாறி மலை விவகாரம்!

 


சிறீலங்காவின் தொல் பொருளியல் திணைக்களமானது இத்தீவில் ஆரிய வம்சத்தினராகிய சிங்கள பௌத்தர்களே ஆதிக் குடிகள் என்பதாக நிறுவுவதை மட்டுமே தனது (அனைவருக்கும் தெரிந்த) இரகசிய வேலைத்திட்டமாக (Projects)  வரித்துள்ளது. என தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. 

இதுதொடர்பாகத் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ.யோகேஸ்வரன், பொ. ந.சிங்கம் ஆகியோரின் கையொப்பங்களுடன் இன்று வியாழக்கிழமை (14.03.2023) இரவு ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இத் தீவிலிருந்து ஆங்கிலேயர் வெளியேறிய காலத்திலிருந்து இலங்கையில் காணப்படும் பௌத்த தொல் பொருளியற் சின்னங்கள் அனைத்தையும் சிங்கள - பௌத்த தொல்பொருள் சின்னங்களாக நிறுவுவது என்பது இத்திணைக்களத்தின் பிரதான பணியாக இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாது இத்தீவில் தமிழர்களின் தொன்மையை சிங்களவர்களின் தொன்மைக்கும் முந்தியதாக நிறுவக் கூடிய எந்த ஒரு தொல் பொருள் சின்னத்தைக் கண்டுபிடிக்கும் போதும் அதைக் கைவிடுவது, மறைப்பது, அழிய விடுவது அல்லது சிங்கள-பௌத்த தொல்பொருள் சின்னமாகத் திரிபுபடுத்துவது என்பனவும் சிறீலங்காவின் தொல் பொருளியல் திணைக்களத்தின் பணிகளாக அமைந்துள்ளதென்பது தமிழர்கள் அனைவருக்கும் வரலாறு தந்த படிப்பினை ஆகும்.

கடந்த 75 வருடங்களாக தொல் பொருளியல் திணைக்களத்தின் மூலமாக தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் இவ்வாறான விஞ்ஞான பூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து, சிங்கள-பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள-பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக வடக்கு-கிழக்கைக் மாற்றியமைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதே சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் முதன்மை நோக்காக இருந்து வருகின்றது.

அரசின் அனுசரணையிலான விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் போலவே தமிழர் பகுதிகளில் இவ்வாறு பௌத்த தொல்பொருட் சின்னங்களைக் கண்டடைவது என்பதுவும், தமிழர்களின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பதற்கான முதற்படியாக எப்போதும் இருந்து வருகின்றமையே இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்த காரணமாகின்றது.

இவ்வாறான பல நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்களுள் (Projects) வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரமும் ஒன்று.

நெடுங்காலமாகத் தமிழ்ச் சைவ மக்களின் வழிபாட்டிடமாக இருந்து வந்த வெடுக்குநாறி மலையில் 2017களில் திடீரென முளைத்த பௌத்த தொல்பொருள் சின்னம் என்ற கோரிக்கை வெடுக்குநாறி மலையை தனியே பௌத்த சின்னமாக மட்டுமன்றி, கூட்டாக சிங்கள-பௌத்த சின்னமாக வரிப்பதை நோக்காகக் கொண்டது என்பது தொல் பொருளியல் திணைக்களத்தின் பதிவுகளிலிருந்து அப்பட்டமாகத் தெரிய வருகின்றது.

அன்றிலிருந்து நீதிமன்ற விவகாரமாக உள்ள இரு இனங்களுக்கிடையிலான இந்த முரண்பாடு தொடர்பாக தொல் பொருளியல் திணைக்களம் மட்டுமல்லாது இவ்வாறான முரண்பாடுகள் அனைத்திலும் தமிழர்களுக்கெதிராக நியாயமற்ற சட்ட மற்றும் வன்முறை வழியிலான பலத்தைச் சிங்கள-பௌத்த பேரினவாதத்துக்கு ஆதரவாகப் பிரயோகித்து வருகின்ற சிறீ லங்காவின் காவல்துறையும் இவ்விடயத்தில் எப்போதும் போல் தொடர்ச்சியாக பக்கச்சார்பாகவே நடந்து வருகின்றது.

இதுவரை நடாத்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் தமிழ் மக்களின் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துக்காட்டுவதாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையிலும் விடாக்கண்டனாகத் தொல் பொருளியல் திணைக்களமும், காவல் துறையும் எவ்வாறேனும் தமிழ் மக்களை வெடுக்குநாறி மலையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றும் நோக்குடன் குதர்க்கமான, நியாயமற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மார்ச் 08 ஆம் திகதி சைவர்களின் மிக முக்கியமான ஆன்மிக வழிபாட்டு நாளான மகா சிவராத்திரியின்போது வழிபாடுகளைத் தடை செய்ய காவல் துறையினர் பல தடவைகள் முயன்ற போதெல்லாம் ஒவ்வொரு தடவையும் நீதிமன்ற ஆணையை பார்வையிட்டு அதனை ஏற்று வெளியேறியிருந்தனர். ஆனால் தொடர்நதும் பல்வேறு வகைகளில் மீண்டும் மீண்டும் ஆலய வழிபாடுகளுக்கும் மக்களுக்கும் இடையூறும், அவமரியாதையும் செய்யும் வகையில் செயற்பட்டுள்ளார்கள். ஈற்றில் நீதிமன்றம் வழங்கயிருந்த அனுமதியையும் மீறி வழிபாட்டை முற்றாகத் தடுத்து நிறுத்தியதுடன், சிறீலங்கா இராணுவத்தின் முள்ளிவாய்க்காற் படுகொலைக் காணொளிகளை நினைவூட்டும் வகையிற் கைது செய்யப்பட்டவர்களையும் நடாத்தியுள்ளார்கள். செய்தித்தாள்களுக்கு ஒன்றும், நீதிமன்றத்தின் வழக்கிற்கு இன்னொன்றுமாகக் குற்றச்சாட்டுகளை மாற்றி மாற்றிக் கூறி, எவ்வாறேனும் சிறைப்படுத்தியுள்ள பக்தர்களைக் கூடிய காலம் சிறையில் வைத்திருப்பதன் மூலம் சித்திரவதை செய்வது, அச்சமூட்டுவது என்ற நோக்கின் அடிப்படையில் அவர்களுக்கெதிராக வழக்குகளைக் காவற்துறை கையாண்டு வருகின்றது.

தொடரும் பேரினவாத நிகழ்ச்சிநிரலின் காரணமாக வரலாறு காணாத பொருளாதார பேரழிவில்  இத்தீவு சிக்கித் தவிக்கும் நிலையிலும், சிங்கள மனவுலகில் ஆழ வேரோடியுள்ள சிங்கள-பௌத்த பேரினவாதம் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அரசயில தலைவர்கள் மட்டுமல்லாது சிறீ லங்காவின் நிர்வாக இயந்திரமும் சிங்கள-பௌத்த பேரினவாத மயப்பட்டுள்ளதையே இவ்வகையான நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. நாவளவில் இன நல்லிணக்கம் பற்றிச் சம்பிரதாயமாக சிங்கள-பௌத்த அரசியற் தலைவர்கள் பேசினாலும், அவர்களது செயற்பாடுகளும், இவ்வாறான நிகழ்வுகளின் போதான அவர்களின் மௌனங்களும் இன வெறுப்பூட்டும் பேச்சுகளும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான திசையிலேயே அமைந்துள்ளன. இது இத்தீவின் சகல தேசங்களுக்கும் நாசகரமான அழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற சிங்கள-பௌத்த பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடும் நோக்கம், சிங்கள-பௌத்த மக்களிடமோ, அதிகார வர்க்கத்தினரிடையோ, தலைவர்களிடமோ அல்லது பௌத்த மதத் தலைவர்களிடமோ இல்லை என்பதையே தெளிவாக வெளிக்காட்டி நிற்கின்றது.

இத்தீவின் புரையோடிப்போயுள்ள சிங்கள-பௌத்த பேரினவாத வெறியையும் அதனால் ஏனைய தேசங்கள் குறிப்பாக தமிழ்த் தேசம் எதிர்கொள்ளும் கட்டமைப்புசார் இனவழிப்பையும் கருத்தில் கொள்ளாது, சில நாடுகளும் சில அமைப்புகளும் நல்லிணக்கப் பொறிமுறைக்கு நிதியூட்டமும் ஆலோசனைகளும் வழங்குவது மட்டுமன்றி அதுபற்றி இனவழிப்பை எதிர்கொள்ளும் எம்மிடமே வக்காலத்தும் வாங்கி வருகின்றனர்.

இத் தீவில் நிகழ்ந்த தேசங்களுக்கிடையிலான ஆயுத மோதல்களின் முடிவை முரண்பாட்டின் முடிவாக (end of armed struggle Vs end of conflict) தாமும் கற்பனை செய்து, எம்மையும் நம்பச் சொல்லும் இந்த வெளியகச்சக்திகளின் முகத்தில் கறையைப் பூசுவது போல் சிங்கள-பௌத்த பேரினவாதம் இவ்வாறான தமிழின விரோத செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது இந்நிலையிலாவது இச்சக்திகள் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் உண்மை முகத்தை உணரத் தலைப்படுமா என்பதுவே எங்கள் கேள்வியாகும். 

இவ்வாறான சிங்கள-பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரல்களையும், அதன்வழியிலான அருவருக்கத்தக்க, அழிவுகரமான ஆக்கிரமிப்புகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துக் கண்டித்து தமிழ் மக்கள் களைத்துவிட்டார்கள்.

தமிழ் மக்கள் இவ்வாறான, தமது தேசிய அடையாளங்கள் மற்றும் தேசிய இருப்பு மீதான அனைத்து வகை அழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக மத, பிராந்திய வேறுபாடுகள் இன்றி, ஒற்றுமையாக அணிதிரள வேண்டியமையே இன்றைய காலத்தின் தேவையாகும். தமிழ் மக்களின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும்; தலைவர்களும் கட்சிகளும் தேர்தல் அரசியலுக்கும் அப்பால் கட்சி பேதமின்றி ஒரே கொள்கையுடன் மக்கள் அணிதிரளுவதற்கு ஊக்கிகளாகவும் முன்னணிச் சக்திகளாகவும் செயற்பட முன் வரவேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள எமது தேசம் பிழைத்திருப்பதற்குரிய வாய்ப்புக்கு, எம்மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வும் இவ்வாறான அணிதிரள்வும் மட்டுமே வழிவகுக்கும்.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை (15.03.2024) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்திற்கு நாமும் எமது தோழமை கலந்த பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கி நிற்பதுடன் தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகின்றோம். மேலும் இவ்விடயம் தொடர்பாக சிறையில் வாடும் எம் உறவுகளுக்கும் எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் எனவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.