வடக்கின் பெரும்போரில் வலுவான நிலையில் யாழ்.சென்ஜோன்ஸ் அணி!

"வடக்கின் பெரும்போர்" என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளுக்கு இடையிலான 117 ஆவது துடுப்பாட்டப் போட்டி இன்று  வியாழக்கிழமை (07.03.2024) காலை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

குறித்த போட்டி எதிர்வரும்-09 ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

இன்றையதினம் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சென்ஜோன்ஸ் கல்லூரியின் அபராமான துடுப்பெடுத்தாட்டத்தால் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. 

அந்தவகையில் 56.5 பந்துப் பரிமாற்றங்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

இந்நிலையில் முதல் இன்னிங்சில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 30.5 பந்துப் பரிமாற்றங்களை எதிர்கொண்டு இரண்டு இலக்குகளை மாத்திரம் இழந்துள்ளதுடன் 109 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.