அலைகடலெனத் திரண்ட அடியவர்கள் மத்தியில் குடமுழுக்குக் கண்டாள் தெல்லிநகராளும் துர்க்கைத் தாய்

மிகவும் பழமை வாய்ந்ததும், வரலாற்றுப் பிரசித்தி பெற்றதுமான யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மகா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான இன்று திங்கட்கிழமை (25.03.2024) மிகவும் பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றது.



மாவை ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்களின் நெறியாள்கையில் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.செந்தில்ராஜக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக கிரியைகளைச் சிறப்புற நிகழ்த்தினர்.     




மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-20 ஆம் திகதி புதன்கிழமை காலை-06.12 மணியளவில் விநாயகர் வழிபாட்டு டன் ஆரம்பமாகியது. கடந்த-21 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இதேவேளை, மேற்படி ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் 11 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்ததுடன் ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.