புன்னாலைக்கட்டுவனில் கோர விபத்து: வீதியோரம் இளைப்பாறிக் கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த கதி!


யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(27.03.2024) பிற்பகல் மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது விவசாய நிலத்தில் வேலைகள் செய்து களைப்படைந்த நிலையில் சிறியரக உழவு இயந்திரத்தில் புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் பலாலி வீதியோரமாக இளைப்பாறிக் கொண்டிருந்த முதியவரை வேகமாக வந்த கனரக வாகனம் மோதித் தள்ளியது. அவ் வாகனம் அப் பகுதியிலிருந்த தொலைபேசிக் கம்பம் மற்றும் தேக்குமரத்துடனும் மோதியது.    

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். கனரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கனரக வாகனத்தில் கூட வந்த வாகனம் செலுத்திச் சென்றவரின் சில நண்பர்கள் பொதுமக்கள் தம்மீது தாக்குதல் நடாத்துவார்கள் என்ற அச்சம் காரணமாக விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரியவருகிறது.          

சம்பவத்தில் ஈவினை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சீனியன் ராசன்(வயது-64) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

சிறியரக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதி தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளும் தூள் தூளாகியுள்ளதுடன் கனரக வாகனத்திற்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனம் மோதியதில் தொலைபேசிக் கம்பமொன்று முறிவடைந்துள்ளதுடன் வீதியோரமாக நின்றிருந்த வளர்ந்த தேக்குமரமும் அடியோடு சரிந்து விழுந்துள்ளது. அத்துடன் முள்ளுக் கம்பி வேலியும் சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகள் மேற்கொண்டதுடன் கனரக வாகனத்திலிருந்து சில மதுப் போத்தல்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். விபத்துக்குக்  காரணமான கனரக வாகனமும், சிரியரக உழவியந்திரத்தின் எஞ்சிய பகுதிகளும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.