வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரிப் பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நேற்றுத் திங்கட்கிழமை (11.03.2024) மாலை-04.15 மணி முதல் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தென்கயிலை ஆதீன முதல்வருமான தவத்திரு.அகத்தியர் அடிகளார், யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன், சாவகச்சேரி வீரபத்திரர் ஆலயப் பிரதமகுரு வி.பாலகுமாரக் குருக்கள், சுதுமலை திருலிங்கேச்சரம் ஆலய சிவாச்சாரியார் அகோரசிவம் உமையரசு, அகில இலங்கை சைவமகாசபையின் தலைவர் நா.சண்முகரத்தினம், அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலாளர் மருத்துவ கலாநிதி ப.நந்தகுமார், யாழ்.மாவட்டச் சர்வமதப் பேரவையின் செயலாளர் இ.ராஜ்குமார், ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.சிவரூபன், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் பொருளாளர் வி. தயாபரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,செல்வராசா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான ந.சிறீகாந்தா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், முன்னாள் வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், கேசவன் சயந்தன், யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ந.விஜயதரன், கிறிஸ்தவ மதகுருமார்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், சிவில்- சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 350 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.