வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவராத்திரியில் பொலிஸாரின் அட்டூழியங்கள்: நாளை நல்லூரில் போராட்டம்

 


வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரிப் பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை  உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை(11.03.2024) மாலை-04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில்  கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அனைவரையும்      அணிதிரளுமாறும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

வெடுக்குநாறி மலை லிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

அதன் உச்ச கட்டமாக தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம்  மோசமாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பூசை மற்றும் படையல் பொருட்கள் சப்பாத்து கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டுள்ளது. பூசகர் சிவத்திரு மதிமுகராசா மீளக் கைது செய்யப்படுள்ளார்.

இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகிற்கும், அரச உயர் பீடத்திற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும்

உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் இந்தச் சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்றுதொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற   மோசமான சம்பங்களைக்  கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்வோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.