மாதகல் சம்புநாத ஈஸ்வரர், கீரிமலை சமுத்திரக்கரை காசி லிங்கேஸ்வரரில் சிவராத்தி வழிபாடு


மகா சிவராத்திரியை முன்னிட்டு மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் கோவில், கீரிமலை சமுத்திரக்கரை காசி லிங்கேஸ்வரர், பொன்னாலை இராவணேஸ்வரம், கிளிநொச்சி மன்னித்தலை சிவலிங்கப் பெருமான், மாங்குளம் ஆதிசிவன் ஆலயம் ஆகிய இடங்களில் அடியவர்கள் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட முடியுமென அகில இலங்கை சைவமகா சபையின் பொதுச்செயலாளர் வைத்தியகலாநிதி ப.நந்தகுமார் தெரிவித்தார்.  

மகா சிவராத்திரி நன்நாளான இன்று வெள்ளிக்கிழமை(08.03.2024)  இரவு முதல் நாளை சனிக்கிழமை (09.03.2024) காலை-06 மணி வரை இவ்வாறு அடியவர்கள் தங்கள் கரங்களால் பால், தயிர், இளநீர், நீர் முதலான அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டான நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.