நல்லூரில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இராமலிங்கம் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள்


தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவாலயம் ஆளுமை விருத்திப் பயிலகத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை (06.04.2024) காலை, மாலை அமர்வுகளாக நல்லூர் ஆதீனப் பிரதான மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

அறிவாலயம் ஆளுமை விருத்திப் பயிலக இயக்குநர் இ.சர்வேஸ்வரா தலைமையில் நாளை காலை-09 மணிக்கு ஏற்பாடாகியுள்ள காலை அமர்வில் பட்டிமன்றங்களில் பேசும் ஆர்வமுள்ள இளையோருக்கான பயில்களம் இடம்பெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் நாளை மாலை-04.30 மணிக்கு நடைபெறவுள்ள மாலை அமர்வில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஆகச் சிறப்பாகச் செப்பனிடுவது எந்தச் சூழல்? எனும் பொருளில் இலக்கியச்சுடர் த.இராமலிங்கத்தை நடுவராகக் கொண்ட சிந்தனை அரங்கம் இடம்பெறும்.

நிகழ்வில் வீட்டுச் சூழலே! எனும் தலைப்பில் சண்டிலிப்பாய் மத்திக் கிராம சேவையாளர் ஜீ.சஜீவனும், கல்விச் சூழலே! எனும் தலைப்பில் மருத்துவபீட மாணவி ந.அபிராமியும், நட்புச் சூழலே! எனும் தலைப்பில் உதவி விரிவுரையாளர் விக்கி சாரங்கனும், சமுதாயச் சூழலே! எனும் தலைப்பில் தமிழ்நாடு தேவகோட்டையைச் சேர்ந்த வி.யோகேஸ்குமாரும் கருத்தாடவுள்ளனர்.