சித்திராப் பூரணை விரத தின வழிபாடுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (23.04.2024) வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வில்லூன்றிப் புனித ஷேத்திரத்தில் இடம்பெற்றது.
நேற்று முன்தினம் அதிகாலை வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகி விசேட பூசை வழிபாடுகள், வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் ஊர்வலமாக யாழ்.புனித வில்லூன்றி ஷேத்திரத்தைச் சென்றடைந்தார்.
அங்கு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-08.30 மணியளவில் வில்லூன்றிப் புனித தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் வரை வில்லூன்றித் தீர்த்தத்தில் தீர்த்தமாடிப் பின்னர் இறந்த தமது தாய்மாருக்காகச் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பிதிர்த் தர்ப்பணங்களும் செய்து கொண்டனர். வில்லூன்றிப் புனித ஷேத்திரப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.சிவசிதம்பரக் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ.விஜயதாஸக் குருக்கள் ஆகியோர் பிதிர்த் தர்ப்பணக் கிரியைகளை நிறைவேற்றினர்.
(செ.ரவிசாந்)