மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், குப்பிழான் ஐ.சண்முகனின் இரசனைக் குறிப்புகள், குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) முற்பகல்-10 மணி முதல் யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் ஓய்வுநிலைக் கிராம அலுவலர் சோ.பரமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
ஆச்சிரம முன்றலில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து திருமதி.கமலாதேவி கந்தலிங்கத்தின் இறைவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சண்முகலிங்கனின் உருவப்படத்திற்கு முன்பாக நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டுத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் ஊடகவியலாளர் செ.ரவிசாந் வரவேற்பு உரையையும், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா விசேட உரையையும், அரசியல் ஆய்வாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் நூல் வெளியீட்டு உரையையும், குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன், ஓய்வுநிலை அதிபர் தில்லைநாதன் ரவீந்திரநாதன் ஆகியோர் வாழ்த்துரைகளையும் ஆற்றினர்.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நீண்ட உரை ஆற்றினார்.
மூத்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் ஆகியோர் கருத்துரைகளையும், குப்பிழான் ஐ.சண்முகலிங்கனின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி.புனிதவதி சண்முகலிங்கன் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தினர்.
திருமதி.புனிதவதி சண்முகலிங்கனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக குப்பிழான் ஐ.சண்முகனின் இரசனைக் குறிப்புகள் நூலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக குப்பிழான் ஐ.சண்முகன் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கிய நூலும் நிகழ்வில் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் முதற்பிரதி, சிறப்புப் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், குப்பிழான் ஐ.சண்முகனின் உறவுகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(செ.ரவிசாந்)