இணுவிலில் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டி: திரண்ட மாணவர்கள்

 

இணுவில் பொதுநூலக சனசமூக நிலையத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு லம்போதரா விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டி நிகழ்வு-2024 கடந்த  ஞாயிற்றுக்கிழமை (21.04.2024) காலை-07.30 மணியளவில் இணுவில் பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இணுவில் பொதுநூலகத் தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போட்டி நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட ஓய்வுநிலைப் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். 

ஆரம்ப நிகழ்வில் இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மையத்தின் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை, ஆசிரியர் இரா.அருட்செல்வம், லம்போதரா விளையாட்டுக் கழகத் தலைவர் இ.டினோஜன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

இந்த வருடம் 23 ஆவது தடவையாக குறித்த மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டதுடன் 6 வயது முதல் 17 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்குப் பிரிவு ரீதியாக நடாத்தப்பட்ட போட்டியில் யாழ்.மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இணுவில் இந்துக் கல்லூரியில் 17 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இடம்பெற்ற திறந்த போட்டியில் ஆர்வமுள்ள பலரும் பங்குபற்றியிருந்தனர். 

இதேவேளை, சதுரங்கச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், அவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் என இணுவில் பொதுநூலக சனசமூக நிலைய வளாகம் ஒரு விழாக் கோலம் போன்று காட்சியளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.     

(செ.ரவிசாந்)