புகையிரத விபத்தில் உயிரிழந்த சயந்தன் ஞாபகார்த்தமாக இணுவில் இளைஞர்களின் அரும்பணி

இணுவிலில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் நடந்த விபத்தில் அநியாயமாக உயிரிழந்த இளம் தொழிலதிபர் ஆனந்தராசா சயந்தன் ஞாபகார்த்த இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.03.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை இணுவில் இந்து விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இணுவில் இந்து விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஞா.ஞானசொரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சயந்தனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டுத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

இணுவில் இந்து விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், உயிரிழந்த சயந்தனின் உறவுகள்,  இணுவில் கிராம இளைஞர்கள் என 40 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வருடா வருடம் இளம் தொழிலதிபர் ஆனந்தராசா சயந்தன் ஞாபகார்த்த இரத்ததான முகாம் நிகழ்வைத் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவரது ஞாபகார்த்தமாகப் பல்வேறு சமூகநலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.   

இதேவேளை, குறித்த இரத்ததான முகாம் நிகழ்வு தொடர்பில் இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைப்பதில் முன்னின்று செயற்பட்ட இளம் சமூக சேவகர் வ.தனகோபி எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்த கருத்துக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம். 

 

 (செ.ரவிசாந்)