யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் மிகவும் குறைந்த கையிருப்பில் குருதி!



யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் எல்லா வகைக் குருதிக்கும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 330 பைந்த் குருதி இருக்க வேண்டிய இடத்தில்  தற்போது 160 பைந்த் குருதியே இருக்கின்றது. இது மிகவும் குறைந்த கையிருப்பாகும். தொடர்ந்து நாம் இரத்ததான முகாம்களை நடாத்தி குருதியை சேகரித்தாலும் நாளுக்கு நாள் குருதியின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதி வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால், குருதி தேவைப்படும் நோயாளர்களுக்குக் குருதியை விநியோகிக்கும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரத்த வங்கியும் இக் கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்தனர்.  

இதுதொடர்பில் இன்று வியாழக்கிழமை (11.04.2024) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,      

இரத்ததானம் செய்கின்ற அமைப்புக்களிடம் எமது கோரிக்கையை விடுத்த போதும் நீண்ட விடுமுறை காரணமாக எல்லோரும் விடுமுறையில் சென்றுவிட்டார்கள். அத்துடன் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், எமது வழமையான இரத்ததான முகாம்களுக்கு மேலதிகமாக அவசரமாக குருதிக் கொடை முகாம்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, இந்த இக் கட்டான நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்ததானம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பின்பக்கத்தில் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள 12 ஆம் இலக்க நுழைவாயிலூடாக இரத்தவங்கிக்கு நேரடியாகச் சமூகமளித்து குருதிக் கொடை வழங்க முடியும். அல்லது இக் காலத்தில் குருதிக்கொடை முகாம்களை உங்கள் பிரதேசங்களில் ஒழுங்கு செய்து தட்டுப்பாட்டை நீக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலதிக தகவல்களுக்கு 0772105375, 0212223063 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றுள்ளது.