ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மேதினப் பிரகடனத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்!


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும், தமிழ்மக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுடன், முக்கியத்துவம் மிக்க இந்த சந்தர்ப்பத்தினைச் சரியாகப் பயன்படுத்திப்  பேரம்பேசி உரிமைககளை வென்றெடுப்பதற்கான திறவுகோலாக மாற்றத் தமிழ்மக்கள் முயலவேண்டும். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மேதினப் பிரகடனச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசத் தொழிலாளர் தின நிகழ்வு-2024 புதன்கிழமை (01.05.2024) வவுனியாவில் இடம்பெற்றது. மாலை-03.30 மணியளவியல் வவுனியா வைத்தியசாலைச் சந்தியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் மேதின எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு அரங்கைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட கட்சியின் மேதினப் பிரகடனச் செய்தியிலேயே இவ்வாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டாகப் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தினால் தமிழர்களது வாக்குகளைப் பெற வேண்டுமாயின் ஒற்றையாட்சி முறைமையை நீக்குவதற்கும், சமஷ்டி அரசியல் யாப்பினை உருவாக்குவதற்குமான நிலையை நோக்கிப் பேரினவாத ஆட்சியாளர்களைத் தள்ள முடியும். அதுமட்டுமன்றி பிராந்திய மற்றும் பூகோள வல்லரசு சக்திகளும் விரும்பியோ விரும்பாமலோ ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டுமெனச் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நிர்ப்பந்தங்களைப்  பிரயோகிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம்.

சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்புக் கோரிக்கைகளைக் கணக்கிலெடுப்பதற்கு எந்தவொரு பௌத்த சிங்கள ஆட்சியாளர்களோ, அவர்கள் சார்ந்த கட்சிகளோ தயாரில்லாத நிலையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அற்ப சலுகைகளுக்காகத் தமிழ்மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் பெரும்பான்மையின வேட்பாளர்கள் வடக்கு கிழக்கு மக்களது வாக்குகளைக் குறிவைத்துப்  பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

அதேவேளை பிராந்திய வல்லரசும் அதனுடன் கூட்டிணைந்து தமது பூகோள நலன்களை மையப்படுத்திச் செயற்படும் சர்வதேச வல்லரசுகளும், இலங்கையில் தமது நலன்களைப் பேணக்கூடிய ஒருவருரை கண்ணைமூடிக் கொண்டு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்மக்கள் தமது வாக்குகளை வழங்கி அவரை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதற்கான நகர்வுகளையும் திரைமறைவில் ஆரம்பித்துள்ளார்கள்.
 
போரால் அழிக்கப்பட்ட தமிழர் தேசத்து மக்களது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது முற்றாகப் புறக்கணித்தவாறு தமிழர் தாயகத்தில் கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சிறீலங்கா ஒர் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி முறைமை கொண்ட நாடு என்ற நிலைப்பாட்டில் ஒருமித்த நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளவர்களே பெரும்பான்மையினக் கட்சிகளது வேட்பாளர்களாக களமிறங்குகின்றார்கள். தமிழர்களது கோரிக்கைகளை கணக்கிலெடுக்கத் தயாரில்லாதவர்களாகவே பெரும்பான்மையின வேட்பாளர்கள் காணப்படுகின்றார்கள் எனவும் மேதினப் பிரகடனச் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.