இணுவில் காரைக்கால் திண்மக் கழிவு அகற்றும் நிலையத்திற்கு எதிராக கிராம இளைஞர்கள் போராட்டம்

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றும் நிலையத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராகவும், அதனைச் சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொண்டுள்ள சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (06.05.2024) முற்பகல்-10.30 மணியளவில் கிராம இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த திண்மக் கழிவு அகற்றும் நிலையத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாய பூமியில் குப்பைக்   கிடங்கா?, மருத்துவக் கழிவுகளைக் கொட்டி எரிக்காதே!, குடிமனைகளை விட்டுக் குப்பைக் கிடங்கை அகற்று!, நல்லூர் பிரதேச சபையே எமக்குத் தீர்வு தா!, தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம், சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு பதாதைகளைத் தமது கைகளில் ஏந்தியும், பல கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.     


       

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றும் நிலையக் குப்பை மேட்டில் கடந்த திங்கட்கிழமை (06.05.2024) இரவு-07.30 மணியளவில் பாரியளவில் திடீர் தீப்  பரவல் ஏற்பட்டது. இந் நிலையில் இரவிரவாக யாழ்.மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து  தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகப் போராடினர். கொழுந்து விட்டெரியும்  தீப் பரவல் மறுநாள் அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் குப்பை மேட்டிலிருந்து புகை தொடர்ச்சியாக வெளித்தள்ளிய வண்ணமிருந்தது. இதனால், அதனை அண்டிய மக்கள் சுவாசம் மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாகவே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.