ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை செவ்வாய்க்கிழமை (21.05.2024) துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகப் பொது நிர்வாக அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளையதினம் அரச நிறுவனங்களில் தேசியக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் பயணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு நாளை இந்தியாவிலும் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஹுசெய்ன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்டவர்கள் அசர்பைஜான் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்ப்பாசனத் திட்டங்களைத் திறந்து வைப்பதற்காக நேற்று (19.05.2024) அங்கு சென்றிருந்தனர்.
திறப்புவிழாவில் கலந்துகொண்ட பின்னர் ஈரானின் வடமேற்கு நகராகிய Tabriz க்கு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி திரும்பிக்கொண்டிருந்த போது தொடரணியாகப் பயணித்த மூன்று ஹெலிகொப்டர்களில் ஒன்றான ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தி ஈரானின் வடபகுதியில் கடும் பனிமூட்டத்திற்குள் சிக்கி சிரமத்திற்குள்ளாகி விபத்துக்குள்ளானது.
எனினும், மற்றைய 2 உலங்கு வானூர்திகளும் எவ்வித இடையூறுகளுமின்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளன.
அசர்பைஜான் எல்லையில் வர்சாகன் எனும் இடத்திலுள்ள மலைப்பாங்கான பகுதியில் ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தியின் பாகங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், வெனிசுவேலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தமது இரங்கல்களை வௌியிட்டுள்ளனர்.