இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மேதினப் பொதுக் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை (01.05.2024) நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
மேதின எழுச்சிப் பேரணி நேற்று முற்பகல்-10.15 மணியளவில் யாழ்.நல்லூர்க் கந்தன் ஆலயத் தெற்கு வீதியிலிருந்து ஆரம்பமானது. மேதின எழுச்சிப் பேரணியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், இலங்கை ஆசிரியர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் மற்றும் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் எனப் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டின் 2/3 சம்பளப் படிநிலையை வழங்கு!, அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பதவி உயர்வு மற்றும் தடைதாண்டல் தாமதங்களுக்குத் தீர்வை வழங்கு!, ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவம் மற்றும் தொழில்வாண்மைப் பிரச்சினைகளுக்கு 31.12.2024 வரை இடைக்காலத் தீர்வை வழங்கு!, சகல பாடசாலை மாணவர்களுக்குமான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து!, மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்து!, கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து!, பயங்கரவாதத் தடைச் சட்டம், நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டமூலங்களை நீக்கு!, தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இறைமை, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்கு, கல்வி மற்றும் அரச சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சிகளை நிறுத்து ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்திப் பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல பதாதைகளைத் தமது கைகளில் ஏந்தியும் கலந்து கொண்டனர்.
மேதின எழுச்சிப் பேரணி முற்பகல்-10.35 மணியளவில் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த காலங்களில் மாவட்டங்கள் தோறும் வேறு அமைப்புக்களுடன் இணைந்து மேதினத்தைக் கொண்டாடி வருகின்ற போதிலும் இம்முறை முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் தனித்து மேதின எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை நடாத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)