தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு

 

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம்

தமிழ் பொது வேட்பாளரை சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதென எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம், சாவகச்சேரி கூட்டுறவு சபை மற்றும் யாழ் மாவட்ட பாரவூர்திகள் சங்கம் ஆகிய மூன்று பொதுஅமைப்புகள் தமது பூரண ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன. 


சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்கள் நடாத்தி வரும் சந்திப்புகளின் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை 31.05.2024 குறித்த அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பும் கலந்துரையாடலும் குறித்த அமைப்புகளின் அலுவலகங்களில் இடம்பெற்றன. 

சாவகச்சேரியிலும், கோண்டாவிலிலும் இடம்பெற்ற மேற்படி சந்திப்புக்களில் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ள மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் குறித்த விடயம் வெற்றிபெற தாம் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தனர்.