ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயார்: அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகத் துணிந்து களமிறங்கத் தயார் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.          

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையை நானும் ஆதரிக்கின்றேன். ஈழத்தமிழருக்கான ஒரு பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவரை ஈழத்தமிழர்களின் நிழல் ஜனாதிபதியாகச் சர்வதேசம் கணிப்பிடுவது காலத்தின் தேவையாகவுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிக் குரலாக, சர்வதேச நீதி கோரிய செயற்பாடுகளில் காத்திரமாகப் பங்கேற்ற அனுபவமுள்ளவளாகிய நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார்.        

எந்தக் கட்சியினதும் அல்லது எந்தவொரு கூட்டினதும் பிரதிநிதியாக அன்றி ஈழத்தமிழர்களுக்கான பொதுப் பிரதிநிதியாக என்னை மாற்றிக் கொள்ளவும், இதற்கான பொருத்தமான கொள்கை வகுப்பு மேற்கொள்ளப்படும் போது அதற்குக் கட்டுப்பட்டு இயங்கவும் தயாராகவுள்ளேன் என்பதைப் பரந்துபட்ட சமூகத்திற்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னைவிட ஆற்றலுள்ள வேறு எவரேனும் நம்பகரமான, நிறுவப்படக் கூடிய வகையில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் அவ்வாறான வேட்பாளரை ஆதரிக்கவும் நான் தயாராகவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் தமிழ்த் தரப்புக்கள் பெரும்பாலும் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமென்பதில் ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்ற பின்னணியில் அனந்தி சசிதரனின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)