அனலைதீவில் காணாமல் போன இரு மீனவர்களும் தமிழகத்தில் உயிருடன் மீட்பு!

 


யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து கடந்த திங்கட்கிழமை (10.06.2024) மாலை கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமற் போயிருந்த இரு மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு மீனவர்களும் நேற்றுப் புதன்கிழமை (12.06.2024)  தமிழகத்தின் நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர். இந் நிலையில் தமிழக மீனவர்களால் 35 மற்றும் 44 வயதான இரு மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த இரு மீனவர்களும் பயணித்த படகு இயந்திரம் பழுதடைந்தமையே மீனவர்கள் நாகப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கக் காரணமெனத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு மீனவர்களிடமும் தமிழகப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.  


இதேவேளை, குறித்த இரு மீனவர்களும் காணாமற் போனமை தொடர்பில் இருவரது குடும்பத்தினராலும் நேற்று முன்தினம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன் அனலைதீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இதுதொடர்பாக கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்குத் தகவல் வழங்கியிருந்தார். இதுதொடர்பாக இலங்கைக் கடற்படையினரால் இந்தியக் கடற்படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதுடன் கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களால் தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.