நீண்டகாலமாக நிலவி வருகின்ற அதிபர்கள்- ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்குத் தீர்வு வழங்குமாறு கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் மாணவர்களின் போசாக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டியும் எதிர்வரும்-26 ஆம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவரின் இல்லத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
26 ஆம் திகதி பாடசாலைகளுக்குப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுப்புவதைத் தவிர்த்துப் பாதுகாப்பான வழிமுறைகள் ஊடாகத் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. வடமாகாணத்தில் குறித்த சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு அதிபர்கள், ஆசிரியர்களின் முழுமையான பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் பங்குபற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களுக்கு அதிகாரிகளாலோ அல்லது திணைக்களத் தலைவர்களாலோ எந்தவிதமானதொரு அச்சுறுத்தல்களையும் விடுக்க முடியாது. தாபன விதிக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் தங்களுக்குச் சுகவீனம் என்ற விடயத்தைக் குறிப்பிட்டு லீவு விண்ணப்பத்தை ரெலிக் கிராம் அல்லது மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் மூலம் திணைக்களத் தலைவருக்கு அனுப்புவதன் ஊடாகத் தங்களின் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை அதிபர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள முடியும்.
இதேநாளில் முற்பகல்-10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.