மாவிட்டபுரம் கந்தன் பெருவிழா ஆரம்பம்

'அபிஷேகக் கந்தன்' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் குரோதி வருடக் காம்யோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (11.07.2024) அதிகாலை-05 மணியளவில் உஷக்காலப் பூசை, 108 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக மேற்படி ஆலயக் காம்யோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.  

காம்யோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை நடனத் திருவிழாவும், 20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை மஞ்சத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கைலாசவாகனத் திருவிழாவும், எதிர்வரும்-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை-04.30 மணி முதல் ஆடித் திருக்கார்த்திகைத் திருவிழாவும், அடுத்த மாதம்-01 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல்-02 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், ஆடி அமாவாசை நாளான மறுநாள்-04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-06.30 மணியளவில் கீரிமலை கண்டகித் தீர்த்தத்தில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறுமென மேற்படி ஆலய ஆதீன ஹர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி ஆலயத்தின் வருடாந்தக் காம்யோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு தொடர்பான சிறப்புக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (08.07.2024) தெல்லிப்பழைப் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.